Sunday, September 8, 2013

(கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்

சமீபமாக பேஸ்புக்கில் பெண்கள் மெட்டி அணிவதில் உள்ள நன்மைகள் பற்றியும், பெண் ஏன் சேலை அணிய வேண்டும் என்றும், பெண் ஏன் கணவன் சாப்பிட்டு முடித்த எச்சில் தட்டில் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் அதிக அளவில் பகிரப்படுகிறது. இது என்ன வகையான மனநிலை என புரியவில்லை. அது ஏன் எல்லா கலாச்சார அடையாளங்களையும் பெண்களே தூக்கி சுமக்க வேண்டியுள்ளது? கேட்டால் பெண்ணின் கையில் தான் குடும்ப கௌரவமும், குழந்தைகளின் எதிர்காலமும் உள்ளது என்று சப்பைக்கட்டு வேறு.

முதலில் சொன்ன விஷயத்துக்கே வருவோம்.

பெண்கள் மெட்டி அணிவது - முன்பு மெட்டி திருமணமானதன் அடையாளம், மெட்டி அணிந்த பெண்ணை 'திருமணமானவள்' என எளிதாக அடையாளம் காண்பதற்காகவே என்றனர். இன்னொரு கட்டுரையில் மெட்டி என்பது முற்காலத்தில் ஆணால் அணியப்பட்டது. அது தலையை குனிந்து நடக்கும் பெண்ணுக்கு திருமணமானவனை எளிதில் அடையாளம் காண உதவியது என்றனர். அப்புறம் மெட்டி 'மர்மான முறையில்' பெண்னின் கால் விரலுக்கு தாவி விட்டது. இப்போதோ மெட்டி ஒரு 'மின் கடத்தி (good conductor)' என்றும், அது காலில் உள்ள நரம்பை தொடுவதன் மூலம் நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால் இந்த வாதத்துக்கு எந்த அறிவியல் பூர்வமான நிரூபனமும் இல்லை ('நியூயார்கிலேயே கடை போட்டு விக்கிறான்' என்பதை தவிர்த்து). அவ்வளவு நல்லதென்றால் ஆண்களும் அணியலாமே? அது ஏன் பெண் மட்டும் அணிய வேண்டும்?ஆணின் காலில் அந்த நரம்பு இல்லையா?

அடுத்ததாக, எச்சில் தட்டில் சோறு சாப்பிடுவது - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிட்டால் தான் கணவனுக்கு பிடித்த/பிடிக்காத உணவு எது என தெரியுமென்றனர். ஏன், அதை கண்களால் பார்த்தாலே தெரியுமே? எந்த உணவு பதார்த்தங்களை சாப்பிடாமல் விட்டிருக்கிறானென்று. சாப்பிட்டுதான் பார்க்க வேண்டுமா? இதை சொன்னால் 'இல்லை, இல்லை எச்சில் தட்டில் சாப்பிடுவது கணவன் மேலுள்ள பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தவே' என்று ஒரு புதுக் காரணம். அப்படியென்றால் ஏன் எந்த ஆணையும் அவன் மனைவியின் தட்டில் சாப்பிட சொல்வதில்லை? ஆணுக்கு தன் மனைவியின் மேல் அன்போ, பாசமோ இல்லையா? இல்லை... வெளிப்படுத்த தேவை இல்லையா?

பெண்கள் கல்வி,வேலை, பொருளாதார சுதந்திரம் என எல்லா துறைகளிலும் பாய்ச்சல் நிகழ்த்துவதை கண்டு சித்தம் கலங்கியவர்களின் வயிற்றெரிச்சலாகவே இந்தகைய (கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்களை பார்க்கத் தோன்றுகிறது.

வருத்தப் படாத வாலிபர் சங்கம்

நேற்று 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படம் பார்த்தேன். இடையில் கொஞ்சம் சவ்வாக இழுத்ததென்றாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல, படம் சொல்லாமல் விட்டதை பற்றியே நான் பேசவந்தது.

M.Sc, M.Phill முடித்தும் வேலை இல்லாமல் கிராமத்தில் பெண்களுக்கு நூல் விடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் கல்யாணமாகியும் மாமனார் காசில் பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டு, ஒரு விட்டேத்தியான மனப்பாங்குடன் இருப்பதுதான் இன்றைய சமூகத்தின் நிலையென்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பொதுவாக படங்களில் வரும் மிகை உணர்ச்சிக்காகவும், யதார்த்ததிற்கொப்பாத ஒரே பாட்டில் பெரிய ஆளாகிவிடுவதாக காட்டுவதற்காகவும் கேலி செய்யப்படுபர் விக்கிரமன். ஆனாலும் 'நல்லவன் இறுதியில் வெல்வான், விடாமுயற்சி ஒருவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்' என்பது போன்ற அவர் பட கருத்துகள் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு முன்னேற உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தன/அளிக்கும் என்பதை மறுக்க இயலாது.

அந்த கண்ணோட்டத்தில் 'வ.ப.வா.ச', 'சூது கௌவ்வும்' போன்ற படங்களை பார்த்து இவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றார்கள் என எண்ணும்போது அயர்சியே மேலிடுகிறது.

எனக்கெல்லாம் இராத்திரி தூங்கும்போது
என் தாத்தா பாட்டி கதை சொல்லி தூங்க வைப்பர். தெரிந்தோ தெரியாமலோ கதையில் பொதிந்துள்ள நீதி மனதிலும் பதிந்து வாழ்கையில் வழி நடத்துகிறது. இப்போதோ தாத்தாவும், பாட்டியும் இருந்த இடத்தை டீ.வி-யும், சினிமாவும் எடுத்துக் கொண்டன. இவற்றில் வரும் நாடகங்களும், திரைப்படங்களும் சொல்லித்தரும் நீதி இதுதானென்றால் இதைபார்த்து வளரும் சந்ததி எப்படி இருக்கும்?

அது சரி, எந்த வழியிலாவது சம்பாதிப்பவன் சாமர்த்தியசாலியாகவும், லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவனாகவும் பார்க்கப்படும் சமூகத்தில் இத்தகைய கருத்துகளை இக்கால திரைப்படங்களில் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே?

விநாயகர் சதூர்தி

இன்று விநாயகர் சதூர்தி. தமிழ்நாட்டில் 5000-க்கும் அதிகமான மண்டலிகள் விநாயகர் சிலைகள் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 20/25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சதூர்திக்கு சிலை வைக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு இல்லை. அன்று அய்யனாரும், மாடனும், நாகர் சாமியும் இருந்த இடங்களான ஆற்றங்கரை, ஊரணிக்கரை, குளத்தங்கரை போன்றவற்றை இன்று விநாயகர் ஆக்கிரமித்துவிட்டார்.

மாரியம்மாள், அங்காளம்மாள், முத்து மாரி, செவிட்டு ராமசாமி, தண்டு மாரி என்று இருந்த எங்கள் குலசாமிகள் எல்லாம் இன்று பெண்பால் சாமிகள் சக்தி/பராசக்தியாகவும், ஆண்பால் சாமிகள் சிவன்/விஷ்ணுவின் அவதாரம் அல்லது அடிப்பொடி என்றும் இன்று புனையப்பட்டு விட்டன.

சுதந்திர போரட்டத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்ட பாலகங்கதர திலகரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆயுதமான விநாயகர் வழிபாடு இன்று எம்மக்களின் குலசாமிகளை அழித்து, இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையுடைய ஒரு கலாச்சாரத்தை நிறுவுவதற்கும், மாற்று மத சிறுபான்மையினருக்கெதிரான பலத்தை காட்டுவதற்குமான ஆயுதமாக்கபட்டுள்ளதை காலத்தின் கோலம் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?